பாப்பாரப்பட்டியில் ரூ21 82 கோடியில் குளிர்பதன கிடங்கு காணொலி காட்சி மூலம் முகஸ்டாலின் திறந்து வைத்தார்
பாப்பாரப்பட்டியில் ரூ2182 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை முதல் அமைச்சர் முக ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தர்மபுரி:
பாப்பாரப்பட்டியில் ரூ.21.82 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
குளிர்பதன கிடங்கு
தமிழக அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் ரூ.21.82 கோடி மதிப்பீட்டில் முதன்மை பதப்படுத்தும் மையம், 2000 டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு, தரம் பிரிப்பு மையம், சிப்பம் கட்டும் கூடம், தர நிர்ணயம் மற்றும் தர கட்டுப்பாட்டு அறை ஆகியவை புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு காணொலி காட்சி மூலம் குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் பார்வையிட்டார்
இதனைத்தொடர்ந்து பாப்பாரப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் மையத்தில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் திவ்யதர்சினி குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து அவர் குளிர்பதன கிடங்கு, தரம் பிரிப்பு மையம், சிப்பம் கட்டும் கூடம், தர நிர்ணயம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை பார்வையிட்டார். இதனை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கலெக்டர் அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பசேகரன், வேளாண் துணை இயக்குனர் முகமது அஸ்லாம், உதவி இயக்குனர் புவனேஸ்வரி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சக்தி, வேளாண் விற்பனைக்குழு நிர்வாக அலுவலர் மணிராஜ், தாசில்தார் அசோக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.