தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளும் வெறிச்சோடின
தூத்துக்குடி:
முழு ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சாலைகளும் வெறிச்சோடின.
கடைகள் அடைப்பு
தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட் டது. இதையொட்டிஆறுமுகநேரி, காயல்பட்டினம், ஆத்தூர் பகுதிகளில் மருந்தகம் மற்றும் பால் கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்களும் திறக்கப்படவில்லை, ஆட்டோக்கள் ஓடவில்லை, அவசர தேவைகளுக்கு மட்டுமே ஆட்டோக்கள் ஒன்றிரண்டு நிறுத்தப்பட்டிருந்தன.
எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மேலவாசல் மெயின் பஜார் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள் மற்றும் அத்தியாவசிய தேவை பொருட்கள் சம்பந்தப்பட்ட கடைகள் திறந்து இருந்தன. தேவையில்லாமல் ஊர் சுற்றியவர்களை எட்டயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதேபோல் விளாத்திகுளம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்செந்தூர், உடன்குடி
திருச்செந்தூர் நகர் பகுதி முழுவதும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மருந்து கடைகள், ஓட்டல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்திருந்தன.
திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தலைமையில் போலீசார் நகர் பகுதியின் எல்கையில் தடுப்பு வேலிகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
உடன்குடியில் மெயின் பஜார் 4 சந்திப்பு, பஸ் நிலையம். சத்தியமூர்த்தி பஜார், தினசரி மார்க்கெட் உட்பட அனைத்து பகுதி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்கள் நடமாட்டம், வாகன ஒட்டம் இன்றி பஜார் வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் த.மங்கையர்கரசி தலைமையில் போலீசார் ரோந்து சுற்றி வந்து பாதுகாப்பு பணிகளை கவனித்தனர். இதைப்போல குலசேகரன்பட்டினம், பரமன்குறிச்சி ஆகிய பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன நடமாட்டம் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
கோவில்பட்டி, ஏரல்
கோவில்பட்டி நகரில் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், சபாபதி, நாககுமாரி, ராணி, பத்மாவதி, சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அரசு-தனியார் பஸ்கள், மினி பஸ்கள், ஆட்டோ, டாக்ஸி, வேன்கள் ஓடாததால் பஸ் நிலையம், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடிக்கிடந்தன. கடைகள் மூடிக்கிடந்தன. மக்கள் நடமாடமின்றி சாலைகளும் வெறிச்சோடி கிடந்தன.
ஊரடங்கையொட்டி ஏரலில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மருந்து கடைகள் திறந்து இருந்தன. ஓட்டல்களில் பார்சல் மட்டும் வழங்கப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஏரல் பஜார் வெறிச்சோடி காணப்பட்டது.
சாத்தான்குளம், சாயர்புரம்
சாத்தான்குளத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில ஓட்டல்களில் மட்டும் பார்சல் மூலம் உணவு வினியோகம் செய்யப்பட்டது. பால் வினியோகம் நடந்தது. மருந்து கடைகள் திறந்து இருந்தன. சாத்தான்குளம் துணை சூப்பிரண்டு ராஜூ தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாயர்புரம் பஜாரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். முக கவசம் அணியாமல் வந்தவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்கள். சம்பந்தமே இல்லாமல் பஜாரில் சுற்றியவர்களையும் எச்சரித்து அனுப்பினர்.