எண்கண் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச விழா
எண்கண் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொரடாச்சேரி:-
எண்கண் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சுப்பிரமணியசுவாமி கோவில்
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே எண்கண் கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. மிகவும் பழமையான கோவில்களுள் ஒன்றான இங்கு தைப்பூச விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார்.
பின்னர் சாமி வீதியுலா நடந்தது. முடிவில் சண்முகர் சன்னதி எதிரே உள்ள கொடிமரம் அருகே சுப்பிரமணியர் எழுந்தருளினார். இதையடுத்து கொடிமரத்திற்கு மஞ்சள், திரவியம், பால், தயிர், சந்தனம் போன்றவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
கொடியேற்றம்
தொடர்ந்து மயில் படம் வரையப்பட்ட கொடிக்கு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, கொடிமரத்தில் கொடி ஏற்றிவைக்கப்பட்டது. பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால், கொடியேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச விழா வருகிற 18-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் தைப்பூச தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் உள்ளதால் தேரோட்டம் நடத்துவதற்கு சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.