காஞ்சீபுரம் சரகத்தில் குற்றங்களை தடுக்க 36 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை - காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. தகவல்
காஞ்சீபுரம் சரகத்தில் குற்றங்களை தடுக்க 36 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்தியபிரியா நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் சரகத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை பிடித்து குற்றங்களை முழுமையாக தடுக்க 36 பேர் கொண்ட சிறப்பு தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இந்த மாதம் 6-ந்தேதி 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
அடுத்தடுத்து நடந்த இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக 2 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். கொலையில் தொடர்புடையவர்களை பிடிக்க சென்ற போது போலீசாரை தினேஷ் மற்றும் மொய்தீன் ஆகியோர் தாக்க முற்பட்டனர். அப்போது தற்காப்புக்காக அவர்களை போலீசார் சுட்டதில் இருவரும் உயிரிழந்தனர். தினேஷ் மற்றும் மொய்தீன் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
காஞ்சீபுரம் சரகத்தில் செங்கல்பட்டில் 7 பேர், திருவள்ளூரில் 18 பேர், காஞ்சீபுரத்தில் 9 பேர் என மொத்தம் 34 பேர் முதன்மை குற்றவாளிகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் நடவடிக்கைகள் மீது தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். இவர்களை தவிர திருவள்ளூரில் 720, செங்கல்பட்டில் 582, காஞ்சீபுரத்தில் 592 பேர் உள்பட மொத்தம் 1894 பேர் அடங்கிய பட்டியலையும் தயார் செய்துள்ளோம். அதிகமான குற்றங்கள் கஞ்சாவால்தான் ஏற்படுகிறது என்பதால் கடந்த 7 மாதங்களாக நடத்தப்பட்ட சோதனையில் 358 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே காஞ்சீபுரம் சரகத்தில் மட்டும் 1,200 குற்றவாளிகளிடமிருந்து எந்த தவறும் செய்ய மாட்டோம் என நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு அவர்களையும் கண்காணிக்கிறோம். சம்பந்தப்பட்டவர்கள் மேலும் தவறு செய்தால் அவர்கள் மீது போலீஸ் துறை கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்.
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகளை கைது செய்யவும், குற்றச்செயல்களை முழுமையாக தடுக்கவும் 36 பேர் கொண்ட சிறப்பு தனிப்படைஉருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சிறப்பு தனிப்படையினர் ரவுடிகளின் நடமாட்டங்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.
பொதுமக்களும் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் போலீஸ்துறைக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். போலீஸ் துறையின் செயல்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் டி.ஐ.ஜி.எம்.சத்தியபிரியா தெரிவித்துள்ளார்.