பித்தளை பாத்திரங்கள்-குத்துவிளக்குகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீர்வரிசை வழங்குவதற்காக நாச்சியார்கோவிலில் பித்தளை பாத்திரங்கள், குத்துவிளக்குகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-01-08 19:57 GMT
திருவிடைமருதூர்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சீர்வரிசை வழங்குவதற்காக நாச்சியார்கோவிலில் பித்தளை பாத்திரங்கள், குத்துவிளக்குகள் உற்பத்தி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
பித்தளை பாத்திரங்கள்-குத்து விளக்குகள்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் பித்தளை குத்து விளக்குகள், பாத்திரங்கள் உற்பத்திக்கு பெயர் பெற்றதாகும். 
இங்கு உற்பத்தி செய்யப்படு்ம் குத்துவிளக்குகள் மற்றும் பித்தளை பாத்திரங்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விரும்பி வாங்கப்படுகிறது.
பொங்கல் சீர்வரிசை பொருட்கள்
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி(வெள்ளிக்கி்ழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பகுதியில் புதிதாக திருமணம் ஆனவர்களுக்கும், சிலர் காலம், காலமாகவும் தங்கள் வீ்ட்டு பெண் குழந்தைகளுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் வழங்குவார்கள்.
அந்த வகையில் இந்த சீர்வரிசை பொருட்களில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் மற்றும் கரும்பு ஆகியவற்றுடன் பித்தளையால் ஆன குத்துவிளக்குகள், பித்தளை பாத்திரங்களும் தவறாமல் இடம் பெறும். 
உற்பத்தி செய்யும் பணி தீவிரம்
ெபாங்கல் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் பித்தளையால் ஆன குத்துவிளக்குகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கும்பகோணம் மற்றும் நாச்சியார்கோவில் பகுதிகளில் பொதுமக்கள் குவிய தொடங்கி உள்ளனர். 
இதனை முன்னிட்டு நாச்சியார்கோவிலில் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் பல்வேறு வடிவங்களில் பித்தளை பாத்திரங்கள் மற்றும் குத்துவிளக்குகளை தொழிலாளர்கள் உற்பத்தி செய்து வருகிறார்கள். இந்த பணி கடந்த பல நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. 
மேலும் இங்கு உள்ள பாத்திர கடைகளில் பாத்திரங்கள், குத்துவிளக்குகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் இங்குள்ள கடைகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை தேர்வு செய்து வாங்கி சென்று வருகிறார்கள். 
விலை உயர்வால் விற்பனை பாதிப்பு 
பித்தளை பொருட்கள் தயார் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாலும், உற்பத்தியாளர்களின் கூலி உயர்வாலும் பித்தளை பாத்திரங்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், இதனால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பித்தளை பாத்திர வியாபாரிகள் சங்க நிர்வாகி பாஸ்கரன் கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் மூலப்பொருட்களின் விலை ஏற்றம், உற்பத்தியாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணமாக பித்தளை குத்து விளக்குகள் மற்றும் பொங்கல் பித்தளை பாத்திரங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. இது வியாபாரிகளுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்