25 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி

சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 25 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2022-01-08 19:44 GMT
சேலம், ஜன.9-
சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 25 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது.
ஒமைக்ரான் அறிகுறி
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக தற்காலிகமாக கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
மாவட்டத்தில் தற்போது தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனையை மேலும் அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 25 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஆய்வக பரிசோதனையில் தெரியவந்தது.
சென்னைக்கு அனுப்பி வைப்பு
இதையடுத்து அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்வது குறித்து மாதிரிகள், மரபணு பகுப்பாய்க்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வெளிவந்த பிறகு தான் அவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதா? என்பது தெரியவரும்.
ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு வருபவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 400-க்கும் மேற்பட்டவர்கள் சேலம் வந்துள்ளனர். அவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்