தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நடவடிக்கை எடுப்பார்களா?
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா, சித்தளந்தூர் கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. இங்குள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வழங்கும்போது நெரிசல் காரணமாக ரேஷன் பொருட்கள் சரிவர கிடைப்பதில்லை. இதனால் வயதானவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் மற்றொரு ரேஷன் கடை அமைத்து அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்களும் கிடைக்க உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.
-குணசேகரன், சித்தளந்தூர், நாமக்கல்.
வேகத்தடை அமைக்க வேண்டும்
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா தேசிய நெடுஞ்சாலை அருகே சிக்கனூர் கிராமம் உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்கின்றன.இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பொதுமக்களின் நலன் கருதி சாலையில் வேகத்தடை அமைத்து தர வேண்டும்.
-நலகிருஷ்ணன், சிக்கனூர், தர்மபுரி.
சாலை சீரமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டியில் இருந்து பாரூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. எனவே பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க முன்வர வேண்டும்.
ஊர்பொதுமக்கள், அரசம்பட்டி, கிருஷ்ணகிரி.
விபத்தை ஏற்படுத்தும் சாக்கடை கால்வாய்
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் 22-வது கோட்டத்தில் ஆண்டிப்பட்டி உள்ளது. இந்த ஊரின் மைய பகுதியில் 4 சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது. இந்த வழியாகத்தான் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் ஏராளமாக சென்று வருகின்றன. 4 சாலைகளையும் சந்திக்கும் இடத்தில் வளையில் சாக்கடை கால்வாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. அப்படி விபத்து ஏற்படும் போது காயம் அடைந்து செல்பவர்களும் ஏராளம். இதுதொடர்பாக மாநகராட்சி சூரமங்கலம் மண்டல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்தவொரு பயனும் இல்லை. எனவே இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் நேரடியாக கவனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தும் இந்த சாக்கடை கால்வாயை சரிசெய்ய வேண்டும்.
எ.கிதியோன், ஆண்டிப்பட்டி, சேலம்.
அரசு கட்டிடங்கள் பராமரிக்கப்படுமா?
சேலம் நாட்டாண்மை கழகம் கட்டிட வளாகத்தில் உள்ள அரசு அலுவலக கட்டிடத்தின் மேல் மரங்கள் வளர்ந்து நிற்கிறது. இதை சீர் செய்து சரியான முறையில் பராமரித்து வந்தால் இந்த பழங்கால கட்டிடங்கள் இன்னும் நீண்ட நாட்கள் செயல்பட்டு வரும். எனவே மாவட்ட கலெக்டர் இதுதொடர்பாக தனிக்கவனம் செலுத்தி நாட்டாண்மை கழக கட்டிடத்தின் மேல் உள்ள மரங்களை அகற்றி முறையாக பராமரிக்க வேண்டும்.
-விஜயராஜசோழன், அத்வைத ஆசிரமம் ரோடு, சேலம்.
குவிந்து கிடக்கும் குப்பைகள்
சேலம் மாநகராட்சி 3-வது வார்டு பூசாரிகாடு பகுதியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லை அதிகரித்துவிட்டது. இதுபற்றி மாநகராட்சி அலுவலரிடம் புகார் கொடுத்தும் பலனில்லை. கொரோனா வைரஸ் பரவும் நிலையில் இப்படி குப்பைகள் அள்ளாமல் இருப்பது அப்பகுதி மக்கள் அச்சப்படுகிறார்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ஊர்பொதுமக்கள், ரெட்டியூர், சேலம்.