உழவர் சந்தைகள், மார்க்கெட்டுகளில் குவிந்த பொதுமக்கள்
இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக சேலத்தில் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். மேலும் இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
சேலம், ஜன.9-
இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக சேலத்தில் உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். மேலும் இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.
பொதுமக்கள் குவிந்தனர்
தமிழகத்தில் கொரோனா, ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதுதவிர ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு எதிரொலியாக நேற்று சேலத்தில் உள்ள அம்மாபேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி ஆகிய 4 உழவர் சந்தைகளிலும் காய்கறிகள் வாங்குவதற்காக ஏராளமானவர்கள் குவிந்தனர். பின்னர் அவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கி சென்றனர். இதேபோல் கடைவீதி, வ.உ.சி. காய்கறி மார்க்கெட், ஆற்றோர காய்கறி மார்க்கெட், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட்டுகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு வியாபாரம் மும்முரமாக நடந்தது.
இன்று செயல்படும்
உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விலை சற்று குறைவாக இருந்தது. அதாவது, தக்காளி கிலோ ரூ.40 வரையும், உருளைக்கிழங்கு ரூ.42 வரையும், சின்ன வெங்காயம் ரூ.50-க்கும், பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், வெண்டை ரூ.70-க்கும், பீன்ஸ் ரூ.40-க்கும், கத்தரிக்காய் ரூ.26-க்கும், கேரட் ரூ.80-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் விலை குறைவான காய்கறிகளை பொதுமக்கள் அதிகளவு வாங்கி சென்றனர்.
மேலும் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளில் நேற்று 248 டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் ரூ.88 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனையானது என்றும், 53 ஆயிரத்து 671 பேர் உழவர் சந்தைகளுக்கு வந்து சென்றனர் என்றும் வேளாண் விற்பனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறைச்சி கடைகள்
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகரிப்பதுடன் விற்பனையும் மும்முரமாக நடைபெறும். ஆனால் முழு ஊரடங்கையொட்டி நேற்று சேலம் திருமணிமுத்தாறு இறைச்சி கடைகளிலும், குகை இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. பெரும்பாலாேனார் இறைச்சிகளை அதிகளவு வாங்கி சென்றனர். சூரமங்கலத்தில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் விற்பனை அதிகமாக இருந்தது.
சேலம் வேளாண் விற்பனை அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனினும் பொதுமக்களின் வசதிக்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர்சந்தைகளும் இன்று செயல்படும். அதாவது அதிகாலை 4 மணி முதல் காலை 10.30 மணி வரை வழக்கம்போல் உழவர்சந்தைகள் செயல்படும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.