வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் திடீர் உண்ணாவிரத போராட்டம்

வேலூர் மத்திய ஜெயிலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முருகன் தன்னை விடுவிக்கக்கோரி திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2022-01-08 18:34 GMT
வேலூர்

வேலூர் மத்திய ஜெயிலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முருகன் தன்னை விடுவிக்கக்கோரி திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

நளினி-முருகன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். 

கடந்த வாரம் நளினி ஒரு மாத பரோலில் வெளியே வந்து, காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கி தினமும் காட்பாடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். 

ஜெயிலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் நளினியும்-முருகனும் தங்களை விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

முருகன் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் தமிழக முதல்-அமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்திருந்தார். அதில், தனது உடல்நலக்குறைவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி உள்ளது. எனவே ஒருமாத பரோல் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவருக்கு பரோல் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் பரோல் வழங்கும்படி நினைவூட்டல் மனு அளித்தார். அதன்பேரிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உண்ணாவிரத போராட்டம்

இந்த நிலையில் முருகன் நேற்று ஜெயிலில் உள்ள அவருடைய அறையில் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஜெயில்நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட உணவுகளை சாப்பிட மறுத்துவிட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அவர், ஜெயிலில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறேன். தன்னை ஜெயிலில் இருந்து விடுதலை செய்யும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொள்வேன் என்று தெரிவித்தார். முருகனிடம் ஜெயில் அதிகாரிகள் தொடர்ந்து பேசியும் அவர் போராட்டத்தை கைவிடவில்லை.

கோர்ட்டு உத்தரவுப்படி நளினியும்-முருகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை நேரில் சந்தித்து பேசி வந்தனர். தற்போது பரோலில் வெளியே உள்ள நளினியை பெண்கள் ஜெயிலில் சந்தித்து பேச ஏற்பாடு செய்யும்படி முருகன் ஜெயில் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்திருந்தார். 

ஆனால் அதற்கான ஏற்பாடுகளை ஜெயில் நிர்வாகம் செய்யாமல் காலதாமதம் செய்து வருகிறது. பரோல் வழங்காதது மற்றும் மனைவியை சந்திக்க ஏற்பாடு செய்யாதது போன்ற காரணங்களால் விடுதலை செய்யக்கோரி முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் என்று அவருடைய வக்கீல் புகழேந்தி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்