பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-08 18:03 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை கிடங்கு

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கிக்கால், அடிஅண்ணாமலை, ஆடையூர் ஆகிய கிராமங்களுக்கான குப்பைகளை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த குப்பை கிடங்கு அமைத்திட தேவனந்தல் ஊராட்சியில் மலையை ஒட்டிய காப்புக்காடு பகுதியில் 5 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது. 

இந்த இடத்தின் அருகில் புனல்காடு, கலர்கொட்டாய், தேவனந்தல், வேடியப்பனூர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமத்தை சேர்த்த மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ், தாசில்தார் சுரேஷ், வருவாய் ஆய்வாளர் ரேவதி மற்றும் ஊரக வளர்ச்சி அலுவலர்கள், வருவாய்த்துறையினர் முன்னிலையில் இந்த காப்புக்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க நிலம் அளவீடு செய்யும் பணி மற்றும் பொக்லைன் எந்திரம் மூலம் சொடி, கொடிகள் அகற்றி நிலம் சமன் செய்யும் பணி நடைபெற்றது. 

இதையறிந்த புனல்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்தனர்.

சமைத்து சாப்பிட்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிராமிய துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது அவர்கள், நாங்கள் அனைவரும் விவசாயம் செய்து வருகிறோம். இங்கு குப்பை கிடங்கு அமைத்தால் நிலத்தடி நீர் பாதிக்கப்படும். இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதனை கைவிடவில்லை. 

மாவட்ட நிர்வாகம் குப்பை கிடங்கு அமைக்க தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டால் கிராம மக்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வோம். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். பின்னர் அதிகாரிகள் நிலம் அளவிடும் பணியை கையிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து மாலையில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்