துணை போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை

மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் குளத்தில் வீசப்பட்டது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் நேரில் விசாரணை நடத்தினார்.

Update: 2022-01-08 17:58 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் குளத்தில் வீசப்பட்டது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் நேரில் விசாரணை நடத்தினார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
மயிலாடுதுறை அருகே சோழம்பேட்டை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள குளத்தில் 30-க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் கிடந்தன. இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலர் முருகேசன் நேரில் ஆய்வு செய்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த்ராஜ் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று அரிசி மூட்டைகளை ஆய்வு செய்தார். அப்போது அங்கு வந்த வட்ட வழங்கல் துறையினர் குளத்தின் கரையோரத்தில் கிடந்த 15 மூட்டை அரிசியை சேகரித்து வாகனத்தில் ஏற்றி சென்றனர். 
நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட வழங்கல் அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் இருந்து புகாரை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறோம்.
இங்கு கொட்டப்பட்டுள்ள அரிசி மூட்டைகள் ரேஷன் கடைகளில் இருந்து கொண்டுவரப்பட்டதா? அல்லது சித்தர்க்காட்டில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் இருந்து கொண்டுவரப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது என்றார். அப்போது மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்