மருத்துவ கல்லூரியில் சேர அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு -கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்
நீட் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறினார்.
சிவகங்கை,
கார்த்தி சிதம்பரம் எம்.பி. சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் மக்கள் பா.ஜனதாவிற்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ்தான் ஆட்சிக்கு வரும். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ைகது செய்த போது அவருடன் அதிகமாக இருந்தவர்கள் பா.ஜனதாவினர் தான். அ.தி.மு.க. சுயமாக செயல்படும் கட்சி கிடையாது.
நீட் தேர்வு வேண்டுமா? வேண்டாமா? என்று பார்ப்பதைவிட நீட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எப்படி இருக்கவேண்டும் என்றுதான் பார்க்க வேண்டும். நீட் தேர்வுக்கு முன்பு பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்ற போது அரசு பள்ளி மாணவர்கள் பயன் அடையவில்லை. நாமக்கல் மாணவர்கள்தான் பயன் அடைந்தனர். நீட் தேர்வு வந்த பின்னரும் அதிக அளவில் கிராமப்புற மாணவர்கள் பயனடையவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்த பின்னர்தான் கிராமப்புற மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு வர முடிந்தது. எனவே நீட் தேர்வு இருந்தாலும் இல்லாவிட்டாலும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். மேலும் நீட் தேர்வு தேவையில்லை என்று தமிழகத்தில் மட்டும்தான் தெரிவிக்கின்றோம். இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்கள் அவ்வாறு கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.