கரூர் மாவட்டத்தில் 18 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா தடுப்பூசி

கரூர் மாவட்டத்தில் நேற்று நடந்த 18-ம் கட்ட முகாமில் 18 ஆயிரத்து 568 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2022-01-08 17:44 GMT
கரூர்
கரூர், 
தடுப்பூசி முகாம்
கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று 18-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாவது தவணைக்கான காலம் வரப்பெற்றவர்களும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 
நேற்று நடைபெற்ற முகாமில் முதல் தவணை தடுப்பூசி 4 ஆயிரத்து 826 பேரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 13 ஆயிரத்து 742 பேரும் என மொத்தம் 18 ஆயிரத்து 568 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
நொய்யல்
நொய்யல் ஈ.வே.ரா. அரசு மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, சேமங்கி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடையனூர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், உதவியாளர்கள் கொண்ட குழுவினர் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டனர்.
தோகைமலை 
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளில் 53 இடங்களிலும் தோகைமலை வட்டார மருத்துவர் தியாகராஜன் மேற்பார்வையில் நேற்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்