கார் மோதி தப்பாட்ட கலைஞர் பலி
குளித்தலை அருகே கார் மோதி தப்பாட்ட கலைஞர் பலியானார். இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குளித்தலை,
பலி
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள கருங்களாப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் நெடுஞ்செழியன் (வயது 55). தப்பாட்ட கலைஞரான இவர், குளித்தலை அருகே உள்ள பரளி பகுதியில் இறந்த பெண் ஒருவரது இறுதிச்சடங்கில் தப்படிக்க சென்றுள்ளார். அவரது இறுதிச் சடங்கு முடிந்த பின்னர் தனது ஊருக்கு செல்வதற்காக கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியிலிருந்து கரூர் நோக்கி சென்ற கார் இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த நெடுஞ்செழியனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
டிரைவர் கைது
இதையடுத்து நிற்காமல் சென்ற காரை குளித்தலை போலீசார் திம்மாச்சிபுரம் பகுதியில் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கார் டிரைவர் கரூர் அண்ணா நகரை சேர்ந்த கண்ணதாசன் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.