கள்ளக்குறிச்சியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா வணிக வளாகங்களில் கோட்டாட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சியில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா வணிக வளாகங்களில் கோட்டாட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்கள், திரையரங்குகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யவும், விதிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு அபராதம் விதிக்கவும் கலெக்டர் ஸ்ரீதர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள மார்க்கெட், துணிக்கடைகள், அரசு ஆஸ்பத்திரி, மந்தைவெளி, ஏமப்பேர் கூட்டுரோடு, நிறைமதி மற்றும் நீலமங்களம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார்.
அப்போது முககவசம் அணியாதவர்கள் மற்றும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்கள் ஆகியோருக்கு அபாரதம் விதித்து ரூ.14,500 வசூலிக்கப்பட்டது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிட பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கினார். அப்போது காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.