பள்ளிவாசல் காவலாளி மீது தாக்குதல்
பண்ருட்டியில் தொழுகை நடத்த பள்ளிவாசலை திறக்காததால் காவலாளியை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி,
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக வார இறுதி நாட்களில்(வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை) வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பண்ருட்டி காந்தி ரோட்டில் உள்ள ஹஜரத் நூர் முகமது ஷா அவுலியா தர்கா என்கிற பள்ளிவாசல் நேற்று முன்தினம் மூடப்பட்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்த ஆரூன் ரஷீத்(வயது35) என்பவர், பூட்டி இருந்த பள்ளிவாசல் கேட்டை காலால் எட்டி உதைத்தும், கையால் தள்ளியும் உள்ளே நுழைய முயன்றார்.
காவலாளி மீது தாக்குதல்
அந்த சமயத்தில் பணியில் இருந்த காவலாளி முகமது நிஜாம் என்பவர் ஓடிவந்து, அரசு அறிவிப்பின்படி பள்ளி வாசல் மூடப்பட்டு இருப்பதாகவும், தொழுகை நடக்க வில்லை என்றும் கூறினார். ஆனால் ஆரூன் ரஷித், தொழுகை நடத்த உடனடியாக திறக்க வேண்டும் என்றார். அதற்கு காவலாளி மறுப்பு தெரிவித்தார்.
இதில் ஆத்திரமடைந்த ஆரூன் ரஷீத், காவலாளி முகமது நிஜாமை கீழே தள்ளி, அவரை தடியால் தாக்கினார். இதில் படுகாயமடைந்த முகமது நிஜாமை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தர்கா நிர்வாக இயக்குனர் அப்துல்லா, பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரூன் ரஷீத்தை கைது செய்தனர்.