120 படுக்கைகளுடன் அரசு கல்லூரி கொரோனா மையமாக மாற்றம்
மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுப்பதால் 120 படுக்கைகளுடன் அரசு கல்லூரி கொரோனா மையமாக மாற்றப்பட்டுள்ளது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு மே, ஜூன் மாதங்களில் மின்னல் வேகத்தில் பரவி வந்த கொரோனா வைரஸ், அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு இறுதி வரை பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தது. இதற்கிடையே இந்தாண்டு தொடக்கம் முதல் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 64 ஆயிரத்து 733 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 876 பேர் பலியான நிலையில், 63 ஆயிரத்து 699 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள 100 பேர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 13 பேர் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
350 படுக்கைகள்
இந்த நிலையில் ஒமைக்ரான் அச்சுறுத்தலால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டு ஆக்சிஜன் வசதியுடன் 350 படுக்கைகளுடன் கொரோனா மையமாக இருந்த வார்டு, தற்போது மீண்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. அதனால் கூடுதல் படுக்கைகளுடன் தனிமைப்படுத்தும் மையம் அமைக்க மாவட்டம் நிர்வாகம் முடிவு செய்தது.
தனிமைப்படுத்தும் மையம்
அதன்படி கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது தனிமைப்படுத்தும் மையமாக செயல்பட்ட வகுப்பறைகளை மீண்டும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற முடிவு செய்து, அனைத்து அறைகளும் நேற்று சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து அங்கு சமூக இடைவெளியுடன் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்தும் மையத்தில் மொத்தம் 120 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.