தேனி மாவட்டத்தில் 13 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 13 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
தேனி:
முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் 13 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா மற்றும் ஒமைக்ரான் நோய் தொற்றுகளில் இருந்து தமிழக மக்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகள் மூலம் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
புகார் செய்யலாம்
தேனி மாவட்டத்தில் 13 தனியார் மருத்துவமனைகளில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்க வேண்டும். இதனை மருத்துவம் சார்ந்த அலுவலர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். சிகிச்சை அளிப்பதில் ஏதேனும் புகார்கள் வந்தால் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சிகிச்சை அளிக்க மறுக்கும் தனியார் மருத்துவமனைகள் மீதான புகார்களை 94458-69848 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும், மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண், 04546-261093, 04546-291971 என்ற தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், டாக்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.