தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது

கடன் தருவதாக கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த தனியார் நிதி நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-01-08 15:37 GMT
சிக்கல்:
கடன் தருவதாக கூறி ரூ.70 ஆயிரம் மோசடி செய்த தனியார் நிதி நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 
போலீசில் புகார்
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள தேவூர் குயவர் தெருவை சேர்ந்தவர் குகன். இவர், கீழ்வேளூர் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கீழ்வேளூரில் இயங்கி வரும் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வருகிறேன். மேலும் என்னுடன் 21 பேர் முகவர்களாக வேலைபார்த்து வருகின்றனர்.
இந்த நிதி நிறுவனத்தின் திருவாரூர் கிளை தலைமை மேலாளராக கோவை மாவட்டம் மதுக்கரை திருவிலாம்பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் கீர்த்தி(வயது 32) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டில் உள்ள கீழ்வேளூர் கிளைக்குட்பட்ட கீழ்வேளூர், தேவூர், நீலப்பாடி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் கிராம மக்களிடம் ரூ.960 செலுத்தி உறுப்பினராக சேர்ந்தால் ரூ.30 ஆயிரம் கடன் தருவதாக கூறியுள்ளார். 
ரூ.70 ஆயிரம்
இதை நம்பிய கிராம மக்கள் முகவர்களாகிய எங்களிடம் ரூ.960 வீதம் மொத்தம் ரூ.70 ஆயிரத்து 80 கொடுத்தனர். வசூலான இந்த பணத்தை மேலாளர் கீர்த்தியிடம் நாங்கள் கொடுத்தோம். ஆனால் அவர் கூறியபடி யாருக்கும் கடன் வழங்கவில்லை. கொடுத்த பணத்தையும் திரும்பி தரவில்லை.
 இதுகுறித்து கேட்டபோது நிறுவனத்தின் இயக்குனர்களிடம் கூறி கடன் வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுவரை கடன் தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. எனவே மோசடி செய்த தனியார் நிதி நிறுவன மேலாளர் கீர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த புகாரில் கூறியிருந்தார். 
தனியார் நிதி நிறுவன மேலாளர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிதி நிறுவன மேலாளர் கீர்த்தியை கைது செய்தனர்.
மேலும் இதில் தொடர்புடைய அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் கோவையை சேர்ந்த அப்துர் ரஹீம், திருச்சியை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்