விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல்
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 10 பெண்கள ்உள்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
நாகை புத்தூர் ரவுண்டானா அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சரபோஜி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய தலைவர் சேவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பொருளாளர் ராமலிங்கம் பேசினார். ஒன்றிய துணை செயலாளர் செல்லத்துரை, கிளை செயலாளர்கள் நீதி கண்ணன், ஹாஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். தொடர் மழை காரணமாக ஒரு மாத காலம் வேலை இல்லாமல் தவித்து வந்த விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
40 பேர் கைது
2020-21-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகையை நாகை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து தடையை மீறி மறியல் போராட்டம் நடத்தியதாக 10 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியலால் நாகை-திருவாரூர் செல்லும் மெயின் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாய்மேடு
வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சிவகுரு பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், கிளைச் செயலாளர்கள் பாலகுரு, செல்வராசு, சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் திருத்துறைப்பூண்டி-வேதாரண்யம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல தகட்டூர் கடைத் தெருவில் மாவட்ட குழுவைச் சேர்ந்த வீரப்பன் தலைமையிலும், மருதூர் கடைத்தெருவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட துணைச் செயலாளர் நாராயணன் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.
இதில் மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஜெயா, ஒன்றிய தலைவர் ரேணுகா மற்றும் விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
திருமருகல்
திருமருகல் ஒன்றியம் நடுக்கடை பஸ்நிறுத்தம் எதிரில் திருமருகல் விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, விவசாயிகள் சங்க ஒன்றிய துணைச் செயலாளர் சந்திரசேகரன், துணை தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. விவசாயிகள் சங்க நாகை மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் ஆகியோர் பேசினர். .
இதில் இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந் மறியலால் திட்டச்சேரி -நன்னிலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.