பொங்கல் பண்டிகையையொட்டி மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகைையயொட்டி, மண்பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2022-01-08 13:30 GMT
திண்டுக்கல்:
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்களே உள்ளன. இதையொட்டி கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு சந்தைகளில் விற்பனை மும்முரமாக நடக்கிறது. இதேபோல் மஞ்சள் குலைகள் இன்னும் ஒருசில நாட்களில் அறுவடை செய்யப்பட்டு விற்பனைக்கு வரத்தொடங்கி விடும்.
பொங்கல் பண்டிகை தினத்தில் முதன்மையான நிகழ்வு, அனைத்து வீடுகளிலும் சர்க்கரை பொங்கல் வைத்து வழிபடுவது தான். நாகரிக காலமாகி விட்டாலும், தற்போதும் வீட்டு முற்றத்தில் கோலமிட்டு அடுப்பு வைத்து மண்பானையில் பொங்கலிடும் பழக்கத்தை பெரும்பாலானவர்கள் கடைபிடித்து வருகின்றனர்.
தயாரிப்பு தீவிரம்
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய தினம் மக்கள் மண் பானையை பொதுமக்கள் வாங்குவார்கள். இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், சாணார்பட்டி, கோபால்பட்டி உள்பட பல பகுதிகளில் மண் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
அதன்படி கோபால்பட்டியை அடுத்த பாறைப்பட்டியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக 10 குடும்பத்தினர் மண் பானை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு, மண் பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.
இதற்காக களிமண்ணை எடுத்து வந்து பக்குவமாக குழைத்து சக்கரத்தில் வைத்து சுற்றி பானை செய்கின்றனர். பின்னர் அந்த பானையை காய வைத்து சூளையில் வைத்து எடுக்கின்றனர். இதையடுத்து உறுதியான மண் பானை தயாராகி விடுகிறது.
 ரூ.40-க்கு விற்பனை
 திண்டுக்கல் மாவட்டத்தில் தயாரிக்கப்படுகிற மண்பானைகள் மதுரை, திருப்பூர், திருச்சி, மணப்பாறை உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதுபற்றி தொழிலாளி மணி கூறுகையில், கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக மண் பாண்ட தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. நலவாரிய உதவிகள் கிடைக்காமல் சிரமப்படுகிறோம். இந்த ஆண்டிலாவது தொழில் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதற்குள் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இரவில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதோடு, பகலில் சுமாரான வெயில் அடிக்கிறது. இதனால் பானைகளை காய வைக்க முடியவில்லை. ஒரு பானை ரூ.40 முதல் ரூ.80 வரை விற்கப்படுகிறது, என்றார்.

மேலும் செய்திகள்