இன்று முழு ஊரடங்கு எதிரொலி அத்தியாவசிய பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல்
இன்று முழு ஊரடங்கு எதிரொலியாக திண்டுக்கல்லில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.
திண்டுக்கல்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படடு உள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு ஆகும். இந்த முழு ஊரடங்கு நாளில் மார்க்கெட், கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, வாகன போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது.
பொதுவாக வேலைக்கு செல்வோர் உள்பட அனைத்து தரப்பினரும் ஞாயிற்றுக்கிழமை தான், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். ஆனால் முழு ஊடங்கு அறிவிக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களை மக்கள் நேற்றே வாங்க தொடங்கினர். இதையொட்டி திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பொருட்கள் வாங்குவதற்கு, திண்டுக்கல்லில் குவிந்தனர்.
காய்கறி-பொருட்கள்
அந்தவகையில் திண்டுக்கல் காந்தி மார்க்கெட், உழவர் சந்தையில் நேற்று காலையிலேயே ஏராளமான மக்கள் குவிந்தனர். மேலும் தேவையான காய்கறிகளை மக்கள் வாங்கினர். அதற்கேற்ப வழக்கத்தை விட கூடுதலாக காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பெரும்பாலான மக்கள் ஊரடங்கு அச்சத்தால் ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிகளை வாங்கினர்.
இதனால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்தது. அதேபோல் மாதத்தின் முதல் வாரத்தில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை மக்கள் மொத்தமாக வாங்குவது வழக்கம். அதன்படி பெரும்பாலான மக்கள் ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் மளிகை கடைகளில் இரவு 10 மணி வரை மக்கள் பொருட்களை வாங்கினர்.
அசைவ பிரியர்கள்
மேலும் அசைவ பிரியர்கள் ஞாயிற்றுக்கிழமை மீன், இறைச்சி சாப்பிடுவதை வழக்கமாக வைத்து உள்ளனர். எனவே அசைவ பிரியர்கள் இன்று சமைப்பதற்கு தேவையான மீன், இறைச்சியை நேற்றே வாங்கினர். எனவே அசைவ பிரியர்களின் வசதிக்காக இரவு வரை மீன், இறைச்சி கடைகள் திறந்து இருந்தன.
அதேநேரம் திண்டுக்கல் பூ மார்க்கெட்டை பொறுத்தவரை தினமும் 8 டன் பூக்கள் விற்பனை ஆகும். ஆனால் ஊரடங்கையொட்டி நேற்று பூக்கள் விற்பனை படுமந்தமாக இருந்தது. வெளியூர் வியாபாரிகள் வராததால் பூக்கள் விற்பனை குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால் பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.
வாகன நெரிசல்
அதோடு இன்று பஸ்கள் உள்பட அனைத்து வாகனங்களும் ஓடாது என்பதால் வெளியூர்வாசிகள் நேற்று காலையிலேயே சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால் திண்டுக்கல் பஸ் நிலையத்தில் காலை 11 மணியில் இருந்தே பயணிகள் கூட்டம் அலைமோத தொடங்கியது. பெரும்பாலான பஸ்களில் இருக்கை கிடைக்காமல் மக்கள் நின்று கொண்டு பயணம் செய்தனர். அதேபோல் திண்டுக்கல் வழியாக சென்ற அனைத்து ரெயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
மேலும் ஊரடங்கையொட்டி பொருட்கள் வாங்குவதற்கு திண்டுக்கல்லில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், வாகன நெரிசல் ஏற்பட்டது. திண்டுக்கல் மெயின்ரோடு, கடைவீதி, ரதவீதிகளில் சில சமயங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று வாகன போக்குவரத்தை சரிசெய்தனர்.