சாமி தரிசனத்துக்கு தடை கோவில் வாசலில் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் காஞ்சீபுரம் கோவில் வாசலில் கற்பூரம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
காஞ்சீபுரம்,
கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜ பெருமாள் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களுக்கு தமிழகம் மட்டும் இல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வந்தனர்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்தநிலையில் நேற்று உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து காஞ்சீபுரம் வருகை தந்த பல பக்தர்கள் கோவில்களின் வாசல் முன்பு கற்பூரம் ஏற்றி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.