சென்னிமலை அருகே மரத்தில் கார் மோதியது: கர்நாடகாவை சேர்ந்த அய்யப்ப பக்தர் சாவு; 7 பேர் படுகாயம்

சென்னிமலை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த அய்யப்ப பக்தர் இறந்தாா். 7 போ் படுகாயம் அடைந்தனா்.

Update: 2022-01-07 20:53 GMT
சென்னிமலை
கர்நாடக மாநிலம் பெங்களூரு அழல்சந்திரா பகுதியில் உள்ள ஜனப்பிரியா அவென்யூவை சேர்ந்தவர் முனேகவுடா (வயது 32). இவர் மாலை அணிந்து அதே பகுதியை சேர்ந்த சிலருடன் காரில் சபரிமலைக்கு சென்று தரிசித்துவிட்டு், நேற்று முன்தினம் இரவு பழனி கோவிலுக்கு சென்றுள்ளார்.
பின்னர் அங்கிருந்து நேற்று ஈரோடு மாவட்டம் சென்னிமலை வழியாக பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தார்கள். காரை முனேகவுடா ஓட்டினார். அதிகாலை 3.30 மணியளவில் ஈங்கூர் ரோட்டில் பாலப்பாளையம் பிரிவில் சென்றபோது நிலை தடுமாறிய கார் ரோட்டோர புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது.
 இந்த விபத்தில் காருக்குள் இருந்த அனைவரும், இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் காருக்குள் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனேகவுடா பரிதாபமாக இறந்து விட்டார். மேலும் அவருடன் வந்த ஜானகிராமன் ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  நித்தின்குமார், விமல்குமார், ராஜேஸ்குமார், ராஜூ, சிவக்குமார், லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இந்த விபத்து குறித்து சென்னிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்