அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
திருச்சியில் ஒரே இரவில் பலே ஆசாமிகள் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து ரூ.1¼ லட்சத்தை திருடி சென்றனர்.
திருச்சி
திருச்சி நகரின் மையப்பகுதியான காந்தி மார்க்கெட் அருகே உள்ள பெரிய கடை வீதி, மேலப்புலிவார்டு ரோடு பகுதியில் மளிகைக்கடை, நாட்டு மருந்து கடை, பிளாஸ்டிக் குழாய் கடை என பல்வேறு கடைகள் உள்ளன.
தற்போது கொரோனா 3-வது அலை பரவலை தடுக்கும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கே கடைகளை அதன் உரிமையாளர்கள் அடைக்க தொடங்கினர். மேலும் போலீசாரும், இரவு 10 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளை மூடச் சொல்லி அறிவுறுத்தினர்.
அடுத்தடுத்த கடைகளில் திருட்டு
இதை பலே ஆசாமிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, நேற்று முன்தினம் இரவே அடுத்தடுத்த கடைகளில் ரொக்கப்பணத்தை திருடி விட்டு தப்பினர். திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் உள்ள மோட்டார் பம்ப் விற்பனை செய்யும் கடை, அடுத்துள்ள பிளாஸ்டிக் குழாய்கள் விற்பனை செய்யும் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை அள்ளிச் சென்றனர். இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல, திருச்சி தில்லைநகர் 10-வது குறுக்குத்தெருவில் 2 செல்போன் கடைகளின் பூட்டை உடைத்து ஒரு கடையில் ரூ.50 ஆயிரம், மற்றொரு கடையில் ரூ.20 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது. தில்லைநகரில் உள்ள மருந்து கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு திருட முயற்சி நடந்திருந்தது. இது குறித்து தில்லைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலே ஆசாமிகள் குறித்து கடைகளின் அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகிறார்கள்.