நிலம்தானம் கல்வெட்டு - சூலக்கல் கண்டெடுப்பு

அருப்புக்கோட்டை அருகே நிலம்தானம் குறித்த கல்வெட்டு மற்றும் சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Update: 2022-01-07 19:30 GMT
அருப்புக்கோட்டை, 
அருப்புக்கோட்டை அருகே நிலம்தானம் குறித்த கல்வெட்டு மற்றும் சூலக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
கள ஆய்வு 
அருப்புக்கோட்டை அருகே உள்ள எஸ்.பி.கே. கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் நிருபர்களிடம் கூறியதாவது:- 
நானும், எனது குழுவில் உள்ள மாணவர்களும் பல்வேறு மாவட்டங்களில் கள ஆய்வு ேமற்கொண்டு, கல்வெட்டினை கண்டுபிடித்து வருகிறோம். அருப்புக்கோட்டை அருகே பண்ணை மூன்றடைப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள வாழைத்தோட்டத்தில் ஒரு கல்வெட்டு இருப்பதாக அந்த பகுதியில் உள்ள மக்கள் எனக்கு தகவல் தெரிவித்தனர். 
அதன்படி பண்ணை மூன்றடைப்பு கிராமத்தில் கள ஆய்வு செய்தோம். என்னுடன் வரலாற்றுத்துறை மாணவர்கள் ராஜபாண்டி, சரத்ராம், பாலாஜி ஆகியோரும் ஈடுபட்டனர். 
நிலக்ெகாடை 
அப்போது அங்குள்ள கல்வெட்டு கி.பி. 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது தெரியவந்தது. அந்த கல்வெட்டு  2½ அடி உயரமும், 1¼ அகலத்திலும் உள்ளது. கல்வெட்டின் மேற்பகுதியில் அஷ்ட மங்கல சின்னமான ஸ்வஸ்திக்சின்னம், சூலாயுதம், கெண்டி போல அமைப்பும் உள்ளது. 
கீழ் பகுதியில் 11 வரிகள் உள்ளன. இது நாயக்கர்கால நிலம்தானம் கல்வெட்டு என்பதை அறிய முடிகிறது. அந்த கல்வெட்டில் உள்ள வாசகத்தில் மதுரை நம்பிக்கு அங்கு செட்டி கொடுத்த நிலக்கொடை ஆகும். இந்த நிலத்திற்கு தீங்கு விளைவிப்பவர்கள் கங்கைகரையில் காராம் பசுவைக்கொன்ற பாவத்தை அடைவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வூரைப் பற்றிய செப்பேடு ஒன்று சென்னை அருங்காட்சியகத்தில் உள்ளது. இவ்வூரின் பழைய பெயர் மூணடைப்பு ஆகும். 1659-ம் ஆண்டு  திருச்சுழி வட்டத்திற்கு உட்பட்டு இருந்தது எனவும் அப்போது மதுரையை ஆட்சி செய்த திருமலை நாயக்கரும், கிழவன் சேதுபதியான ரகுநாத சேதுபதியும் இவ்வூருக்கு வந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாத காணிக்கை 
அந்த கிராமத்தில் திசைக்காவலராக பளுத்தாண்டி குய்ச்சி அம்பலக்காரன் என்பவர் இருந்தார். அவர் மன்னரை சந்தித்து பாதகாணிக்கையாக சர்க்கரையை படைத்து இந்த மூணடைப்பு கிராமத்தில் திசைக்காவலராக பணி செய்ய விரும்புகிறேன். ஆனால் நீங்கள் அதற்கு ஈடாக நன்செய், புன்செய் நிலங்களை வழங்க வேண்டும் என கேட்டுக்ெகாண்டார். அதற்கு மன்னரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் அதற்கு திசைக்காவலன் தங்களது தானமாக வழங்குவதை செப்பு பட்டயத்தில் பொறித்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 
அதன்படி கொடுக்கப்பட்ட அந்த செப்புப்பட்டயத்தில் திருமலைநாயக்கரும், கிழவன் சேதுபதியான ரகுநாத சேதுபதியும் கையொப்பமிட்டு வழங்கினர் என்ற செய்தி உள்ளது. மதுரை வடக்கு வாசலை சேர்ந்த மீனாட்சி ஆசாரி தான் அதனை பதித்து கொடுத்துள்ளார். அந்த செப்பேட்டில் கூறப்பட்டுள்ள மூணடைப்பு என்ற ஊர் பெயரே காலப்போக்கில் மருவி பண்ணை மூன்றடைப்பு என அழைக்கப்படுகிறது.
முதல் முறை 
எனவே சென்னை அருங்காட்சியத்தில் உள்ள தானத்தை குறிப்பிடும் செப்பேடும், தற்போது கண்டறிந்த கல்வெட்டும் ஒரே காலகட்டத்தை சேர்ந்ததாக காணப்படுவதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தானமாக அளித்த நிலத்திற்கு தீங்கு விளைவிப்பது என்பது புனிதமான கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற பாவத்திற்கு சமம் என விருதுநகர் மாவட்ட செப்பு பட்டயம் மூலம் பெறப்பட்ட இத்தகைய செய்தி விருதுநகர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட நிலத்தான கல்வெட்டு வாயிலாக வெளிவருவது இதுவே முதல் முறையாகும்.
இந்த கல்வெட்டு கண்டெடுக்க பகுதிக்கு அருகே சூலக்கல் ஒன்றும் கண்ெடடுக்கப்பட்டுள்ளது. சூலக்கல் என்பது சிவன் கோவிலுக்கு தானமாக வழங்கிய நிலத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டது ஆகும். இந்த கல்வெட்டினையும், சூலக்கல்லையும் இன்னும் முழுமையாக படித்தால் நிறைய வரலாற்று தகவல்கள் தெரியவரும். 
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்