கொரோனா பாதிப்பு மீண்டும் 100-யை தாண்டியது
சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 100-யை தாண்டியதால் பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டு உள்ளது.
சேலம்,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சேலம் மாவட்டத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 50-க்கும் குறைவாக இருந்த தொற்று பாதிப்பு நேற்று மீண்டும் 100-யை தாண்டியது. நேற்று முன்தினம் 92 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக 119 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
அதன்படி மாநகராட்சி பகுதியில் 69 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.. கொளத்தூர், தாரமங்கலம், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர், மேட்டூர், ஏற்காட்டில் தலா ஒருவர், மகுடஞ்சாவடி, நங்கவள்ளி, வாழப்பாடி, நரசிங்கபுரம் பகுதியில் தலா 2 பேர், பனமரத்துப்பட்டியில் 3 பேர், வீரபாண்டி, தலைவாசலில் தலா 4 பேர், அயோத்தியாப்பட்டணத்தில் 5 பேர், சேலம் ஒன்றிய பகுதியில் 6 பேர், ஓமலூரில் 7 பேர், ஈரோட்டில் இருந்து சேலத்துக்கு வந்த 2 பேர் உள்பட மொத்தம் 119 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 2 ஆயிரத்து 932 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 690 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் கொரோனாவுக்கு 1,731 பேர் பலியாகி உள்ளனர்.