திருவண்ணாமலையில் ஆஸ்திரேலியா நாட்டு முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

ஆஸ்திரேலியா நாட்டு முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2022-01-07 19:14 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை திருநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 69). இவருக்கு சொந்தமாக திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள மகாசக்தி நகரில் மாடி வீடு உள்ளது. அந்த வீட்டின் மாடியில் கடந்த 21.12.2019 முதல் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த கோயப் ஸ்மித் கே ராபர்ட் (60) என்பவர் வாடகைக்கு வசித்து வந்தார். அவர் கடந்த சில மாதங்களாக பணப் பிரச்சினையால் மன வேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இவரின் சுற்றுலா விசாவுக்கான கால அவகாசம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் மகாசக்தி நகரில் உள்ள அவரின் வீட்டுக்கு எலக்ட்ரிக் வேலை தொடர்பாக சென்றுள்ளார். அதற்காக ஏணியை எடுக்க மாடிக்கு சென்றபோது கோயப் ஸ்மித் கே ராபர்ட் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து அவர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி ைவத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து வெளிநாட்டு சுற்றுலா பயணியான கோயப் ஸ்மித் கே ராபர்ட் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்