ஓடிக்கொண்டிருந்த லாரியில் இருந்து கழன்று விழுந்த டீசல் டேங்க்
கரூரில் ஓடிக்கொண்டிருந்த லாரியில் இருந்து டீசல் டேங்க் கழன்று விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கரூர்,
கழன்று விழுந்த டீசல் டேங்க்
கரூர்-சேலம் பை-பாஸ் சாலையில் நேற்று முன்தினம் 20 சக்கரங்களுடன் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரி திருக்காம்புலியூர் அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த லாரியில் 250 லிட்டர் டீசலுடன் இருந்த டீசல் டேங்க் கழன்று சாலையோரத்தில் விழுந்தது.
இது தெரியாமல் லாரி டிரைவர் லாரியை நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தார். இதனை பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் பார்த்து லாரி டிரைவரிடம் விவரத்தை கூறினர்.
பரபரப்பு
இதனையடுத்து டிரைவர் லாரியை திருப்பி வந்து பார்த்த போது, டீசல் டேங்க் சாலை ஓரத்தில் கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் டீசல் டேங்க்கை லாரியில் ஏற்றிக்கொண்டு டிரைவர் புறப்பட்டு சென்றார்.
இதனால் சேலம் பை-பாஸ் சாலையில் சுமார் 30 நிமிடத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
250 லிட்டர் டீசல்
இதுகுறித்து லாரி டிரைவர் கூறுகையில், ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து பேட்டரிகளை ஏற்றிக் கொண்டு மதுரை சென்று இறக்கி விட்டு மீண்டும், சித்தூர் வழியாக உத்தரபிரதேசத்துக்கு செல்ல உள்ளதாகவும், அப்போது டீசல் டேங்க் கழன்று விழுந்தது தெரியாமல் மற்றொரு டீசல் டேங்க் இருந்ததால் நிற்காமல் சென்று விட்டதாகவும் தெரிவித்தார். மேலும் அதில் 250 லிட்டர் டீசல் இருந்ததாகவும் லாரி டிரைவர் தெரிவித்தார்.