வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத பஸ்களுக்கு ரூ.500 அபராதம்

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.500 அபராதம் விதித்தனர்.

Update: 2022-01-07 18:56 GMT
கரூர்
கரூர், 
வாகன சோதனை
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பொதுமக்கள் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தப்பட்டது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் காவல்துறை சார்பிலும், மாநகராட்சி சார்பிலும் முக கவசம் அணிய வேண்டும் மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
இந்நிலையில் நேற்றுமுன்தினம் முதல் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ.500 அபராதம்
இந்நிலையில் நேற்று மாநகராட்சி சார்பில் சர்ச் கார்னர் பகுதியில் மாநகராட்சி நல அலுவலர் லட்சிய வர்ணா தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு மற்றும் தனியார் பஸ்களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் அதிகளவில் பயணிகளை ஏற்றி வந்ததாக 25-க்கும் மேற்பட்ட பஸ்களுக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.
மேலும் பஸ் டிரைவர், கண்டக்டரிடம் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கினர். இதேபோல் அந்த வழியாக முக கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் ரூ.200 அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்