அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் சாமி தாிசனம் செய்ய தடை

கொரோனா, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-01-07 18:27 GMT
திருவண்ணாமலை

கொரோனா, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையாக அருணாசலேஸ்வரர் கோவிலில் 3 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதம் தொடக்கத்தில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த அய்யப்ப பக்தர்களும், மேல்மருத்தூர் பக்தர்கள் கூட்டமும் அதிகமாக காணப்பட்டது. 

இந்த நிலையில் கொரோனா, ஒமைக்ரான் பரவல் காரணமாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்து உள்ளது. அதன்படி நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட 4 கோபுர வாசல்களும் மூடப்பட்டது. மேலும் அதன் முன்பு இது குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.

கோவிலுக்குள் அனுமதிக்கப்படாததால் பக்தர்கள் ராஜகோபுரத்தின் முன்பு தேங்காய் உடைத்து, விளக்கேற்றி வழிபாடு செய்தனர். வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களும் மூடப்பட்டது. இதனால் கிரிவலம் சென்ற பக்தர்கள் அஷ்டலிங்கத்தை வழிபட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இரவு ஊரடங்கு அமல்

மேலும் நேற்று முன்தினம் முதல் இரவு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை திருவண்ணாமலை நகரம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 9.30 மணி முதல் போலீசார் ரோந்து சென்று அனைத்து கடைகளையும் அடைக்க உத்தரவிட்டனர்.

 அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில தினங்களாக வெளியூர் பக்தர்கள் வருகை காரணமாக திருவண்ணாமலை நகரில் வியாபாரம் நடந்து வந்த நிலையில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் வியாபாரிகள் மிகவும் வேதனை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்