அரசு, தனியார் மருத்துவமனையில் 2,800 படுக்கை வசதிகள் தயார் -கலெக்டர் தகவல்

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,800 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

Update: 2022-01-07 18:19 GMT
காரைக்குடி, 

கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றை எதிர்கொள்ளும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2,800 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். காரைக்குடி அருகே அமராவதிபுதூரில் உள்ள காசநோய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கான சிறப்பு சிகிச்சை மையம், கிராமிய பயிற்சி மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையம், திருப்பத்தூரில் உள்ள சுவீட்டீஸ் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
 பின்னர் அவர் கூறியதாவது:-
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் 3-வது அலை தற்போது வேகமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அனைத்து இடங்களிலும் நோய் தொற்று தடுப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
தற்போது உள்ள நிலையில் மாவட்டத்தில் நாள்தோறும் 10 முதல் 19 நபர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை சிவகங்கை மாவட்டத்தில் 67 பேர் பாதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வருகின்றனர்.

2,800 படுக்கை வசதிகள்

 கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை கருத்தில் கொண்டு முதற்கட்ட சிகிச்சைக்காக அமராவதிபுதூர் காசநோய் மருத்துவமனை மற்றும் திருப்பத்தூர் சுவிட்டீஸ் மிஷன் மருத்துவமனை ஆகியவற்றில் முதற்கட்டமாக 200 படுக்கைகள் கொண்டு சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. அதேபோல் அமராவதிபுதூரில் உள்ள கிராமிய பயிற்சி மைய வளாகத்தில் 100 படுக்கை வசதிகள் சிகிச்சைக்காக கூடுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது. காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனை, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இவைகளுடன் சேர்த்து தனியார் மருத்துவமனை உள்பட மாவட்டத்தில் 2800படுக்கை வசதிகள் கொண்டு சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. மேலும் போதியளவு ஆக்சிஜன் கலன்கள், ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளதால் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.
 இவ்வாறு அவர் கூறினார். 
கலெக்டர் ஆய்வின் போது துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் ராம்கணேஷ், தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டார மருத்துவ அலுவலர்கள் டாக்டர் செந்தில்குமார், ரித்திகா, காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்