கார் மோதி வாலிபர் சாவு; 2 மாணவர்கள் படுகாயம்
தேவகோட்டை அருகே கார் மோதி வாலிபர் பலியானார்.
தேவகோட்டை,
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, கருமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் புலிக்குட்டி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 26) வேன் டிரைவர். நேற்று மதியம் தனது உறவினரான கருமொழி ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம் மகன்கள் 7-ம் வகுப்பு படிக்கும் அன்புசெல்வம் (12) 6-ம் வகுப்பு படிக்கும் சித்திக்குராஜ் (11) ஆகிய இருவரையும் அவர்கள் படித்து வரும் தேவகோட்டை அருகே உள்ள கோடிகோட்டை தனியார் பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று கொண்டிருந்தார். சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த ஒரு கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் மணிகண்டன் மற்றும் 2 சிறுவர்களும் படுகாயமடைந்தனர். சிகிச்சைக்காக தேவகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். 2 சிறுவர்களும் படுகாயத்துடன் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.