விவசாயி வீட்டில் 17 பவுன் நகை திருட்டு
மத்தூர் அருகே விவசாயி வீட்டில் 17 பவுன் நகை திருடப்பட்டது.
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள சுண்ணாம்புப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 52). விவசாயி. இவருடைய மனைவி சத்யா. இந்த தம்பதிக்கு 2 மகளும், ஒரு மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு கடந்த மாதம் திருமணமானது. அவருடைய நகைகளை முருகேசன் தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று காலை முருகேசன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்றார். பின்னர் மாலை திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 17 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து அவர் மத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.