ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை வழிமறித்து தாக்கி கொல்ல முயற்சி

கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியை வழிமறித்து தாக்கி கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-01-07 16:41 GMT
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் தாத்தப்பன்குளம் தெருவில் வசித்து வருபவர் ரவிக்குமார் (வயது 45). இவர் கம்பம்-குமுளி சாலையில் உள்ள நந்தனார் காலனியில் இருசக்கர வாகனங்கள் உதரிபாகங்கள் விற்பனை கடை வைத்துள்ளார். மேலும் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு பிரிவான தர்ம ஜாக்ரான் என்ற அமைப்பில் தேனி மாவட்ட தலைவராகவும் உள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை ரவிக்குமார் வீட்டில் இருந்து கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கடை அருகே ரவிக்குமார் வந்தபோது, முககவசம் அணிந்து வந்த 4 மர்மநபர்கள் அவரை வழிமறித்து ஹெல்மெட், உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ரவிக்குமாரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த  கம்பத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, ரவிக்குமாரை தாக்கிய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினர் கலைந்து சென்றனர். 
இதேபோல் ரவிக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் பாண்டியன், இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் முருகன்ஜி, ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் மூவேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த சம்பவம் தொடர்பாக கம்பம் தெற்கு போலீசார், கொலை செய்ய முயன்றதாக வழக்குப்பதிந்து தப்பியோடிய 4 பேரை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்