கூடலூரில் 15 அடி ஆழ தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுத்தை மீட்பு
கூடலூரில் 15 அடி ஆழ தொட்டிக்குள் சிறுத்தை தவறி விழுந்தது. அதை வனத்துறையினர் மீட்டனர்.
கூடலூர்
கூடலூரில் 15 அடி ஆழ தொட்டிக்குள் சிறுத்தை தவறி விழுந்தது. அதை வனத்துறையினர் மீட்டனர்.
15 அடி ஆழ தொட்டி
கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, மான், கரடி உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அவை அடிக்கடி ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கூடலூர் சில்வர் கிளவுட் தனியார் எஸ்டேட் 2- வது டிவிஷன் 27-வது மைல் பகுதியில் எஸ்டேட் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அங்கு இருந்த 15 அடி ஆழ தொட்டிக்குள் உறுமல் சத்தம் கேட்டது.
சிறுத்தை தவறி விழுந்தது
இதனால் தொழிலாளர்கள் அங்கு பார்த்தனர். அப்போது அங்கு சிறுத்தை கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இது குறித்து கூடலூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த சிறுத்தை அந்த தொட்டிக்குள் தவறி விழுந்தது தெரிய வந்தது. அத்துடன் அது வனத்துறையினரை பார்த்து உறுமிக்கொண்டே இருந்தது. இதையடுத்து அது நன்கு ஆரோக்கியமாக இருப்பது தெரிய வந்தது.
ஏணி வழியாக வெளியே வந்தது
இதைத்தொடர்ந்து மரக்கட்டைகள் மூலம் ஏணி அமைத்து அதை அந்த தொட்டிக்குள் வனத்துறையினர் வைத்தனர். பின்னர் சிறிது தூரத்தில் நின்று கண்காணித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அந்த தொட்டிக்குள் விழுந்து கிடந்த சிறுத்தை, அந்த ஏணி வழியாக ஏறி மேலே வந்தது.
பின்னர் அந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் குதித்து தப்பி ஓடியது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஏதாவது விலங்கை வேட்டையாட ஓடி வரும் போது தொட்டிக்குள் தவறி விழுந்து இருக்கலாம். சிறுத்தை புலியின் பாலினம் தெரியவில்லை. 2 வயது இருக்கலாம் என்றனர்.