திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம் வெறிச்சோடியது

வழிபாட்டுக்கு 3 நாள் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம் நேற்று பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது

Update: 2022-01-07 15:14 GMT
திருச்செந்தூர்:
வழிபாட்டுக்கு 3 நாள் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகம் நேற்று பக்தர்கள் இன்றி வெறிச்சோடியது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் வெளியே நின்று கோபுர தரிசனம் செய்தனர்.
வழிபாட்டுக்கு தடை 
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்துக்குள் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோவில் தெற்கு, வடக்கு டோல்கேட் மற்றும் அனுக்கிரக மண்டபம் முன்பு பக்தர்கள் கோவில் வளாகத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு தடுப்புகள் அமைத்து போலீசார் மற்றும் கோவில் தனியார் பாதுகாவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
வெறிச்சோடிய கோவில் வளாகம்
இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதி பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தது. இருப்பினும், ஆகமவிதிப்படி கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, அனைத்து கால பூஜைகளும் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்றன.
கோவில் வளாகத்துக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கோவில் வடக்கு டோல்கேட் முன்பு நின்று சூடம் ஏற்றி கோபுர தரிசனம் செய்து விட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்