வழிபாட்டுத் தலங்கள் மூடல்

வழிபாட்டுத் தலங்கள் மூடல்

Update: 2022-01-07 13:52 GMT

கோவை

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கோவையில் வழிபாட்டுத் தலங்கள் நேற்று மூடப்பட்டு இருந்தன. வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.

வழிபாட்டுத்தலங்கள் மூடல்

கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனால் கோவை மாவட்டத்தில் நேற்று வழிபாட்டுத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.

அதன்படி கோவை கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதான கதவு மூடப்பட்டு இருந்தது. 

அங்கு வந்த பக்தர்கள் வாசலில் நின்று தரிசனம் செய்துவிட்டு திரும்பினர்.  சிலர் தாங்கள் கொண்டு வந்த பூக்களை கோவில் வாசல் கதவின் அருகே வைத்து சூடம் ஏற்றி வழிபட்டனர்.

இதேபோல் ஈச்சனாரி விநாயகர் கோவில், மருதமலை முருகன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில், கார மடை அரங்கநாதர் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் மூடப் பட்டு இருந்தன. 

மேலும் கோவில்களின் அருகே இருக்கும் பூ மற்றும் பூஜைப் பொருட்கள் விற்பனை கடைகளும் திறக்கப்பட வில்லை.

அரசின் வழிகாட்டு நெறிமுறை

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகை யில், கோவை மாவட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ள 49 கோவில்கள் உள்பட 369 கோவில்களும் மூடப்பட்டன. 

ஆனாலும் சுவாமிக்கு பூஜைகள் மற்றும் நைவேத்தியம் அர்ச்சகர்கள் மூலம் செய்யப்பட்டது. 

பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்க வில்லை. கோவில்களின் வெளி பிரகாரங்களில் எந்த நிகழ்ச்சியும் நடக்காது. 

திங்கட்கிழமை மீண்டும் கோவில்கள் திறக்கப்பட்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

வீடுகளில் தொழுகை

இதேபோல் பூ மார்க்கெட்டில் உள்ள ஐதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாஅத் மசூதி உள்பட மசூதிகள் மூடப்பட்டு இருந்தன. 

இதனால் வெள்ளிக்கிழமை தொழுகையை இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே மேற்கொண்டனர். 

இதேபோல் மிக்கேல் அதிதூதர் பேராலயம் உள்பட தேவாலயங்கள் மற்றும் ஜெயின் கோவில்களும் மூடப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்