கூடலூரில் 15 அடி தொட்டிக்குள் தவறி விழுந்த சிறுத்தை புலி மீட்பு
கூடலூர் வனப்பகுதியில் இருந்து குடிதண்ணீர் உள்ளிட்ட தேவையைக் கருதி வனவிலங்குகள் இரவில் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது.
கூடலூர்,
கூடலூர் வனப்பகுதியில் இருந்து குடிதண்ணீர் உள்ளிட்ட தேவையைக் கருதி வனவிலங்குகள் இரவில் ஊருக்குள் வர தொடங்கியுள்ளது. கூடலூர் சில்வர் கிளவுட் தனியார் எஸ்டேட் 2- வது டிவிஷன் 27-வது மைல் பகுதியில் உள்ளது. வழக்கம் போல எஸ்டேட் தொழிலாளர்கள் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் உள்ள 15 அடி ஆழ சிமெண்டு தொட்டிக்குள் சத்தம் கேட்டது. இதனால் தொழிலாளர்கள் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தனர்.
அப்போது தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த தொட்டிக்குள் சிறுத்தைப்புலி ஒன்று தவறி விழுந்து கிடப்பதை கண்டனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடலூர் வனச்சரகர் கணேசன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மரக்கட்டைகள் மூலம் ஏணி அமைத்து தொட்டிக்குள் இறக்கினர். தொட்டிக்குள் கிடந்த சிறுத்தை புலி வனத்துறையினர் அமைத்திருந்த ஏணி வழியாக மளமளவென ஏறி வெளியேறி அடர்ந்த வனப்பகுதிக்குள் தப்பி ஓடியது.