பெங்களூரு மாநகரில் காப்பீட்டை புதுப்பிக்காமல் ஓடும் போலீஸ் வாகனங்கள்

பெங்களூரு மாநகரில் காப்பீட்டை புதுப்பிக்காமல் போலீஸ் வாகனங்கள் இயக்கப்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்ட தகவல் மூலம் அம்பலமாகி உள்ளது.

Update: 2022-01-06 21:48 GMT
பெங்களூரு:

காப்பீட்டு காலம் முடிவடைந்தும்..

  பெங்களூருவில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக ஹெல்மெட் அணியவில்லை, காப்பீட்டு காலம் முடிவடைந்த பிறகும் வாகனத்தை ஓட்டி வருவதாக கூறி போக்குவரத்து போலீசார், பெங்களூருவில் வாகனங்களில் சுற்றி திரிபவர்களை பிடித்து அபராதம் வசூலித்து வருகிறார்கள்.

  இந்த நிலையில், போக்குவரத்து போலீசார் முதல் உயர் போலீஸ் அதிகாரிகள் பயணம் செய்யும் வாகனங்களில் காப்பீட்டு காலம் முடிவடைந்த பின்பும், அந்த வாகனங்களில் வலம் வருவது பற்றி தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலரான பரமேஸ் தகவல் திரட்டி உள்ளார்.

போலீஸ் அதிகாரி வாகனம்

  அதன்படி, ஒயிட்பீல்டு மண்டல துணை போலீஸ் கமிஷனர் பயன்படுத்தும் சொகுசு காரின் காப்பீடு 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றுவிட்டது. ஆனாலும் துணை போலீஸ் கமிஷனர், அந்த காரில் தான் வலம் வந்து கொண்டு இருக்கிறார். காடுகோடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பயன்படுத்தும் வாகனத்தின் காப்பீடு கடந்த 2018-ம் ஆண்டு மே மாதத்துடன் முடிந்து விட்டது.

  கே.ஆர்.புரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீசார் பயன்படுத்தும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களின் காப்பீட்டு காலம் முடிவடைந்து ஆண்டு மற்றும் மாதக்கணக்கு ஆன பின்பும் தொடர்ந்து, அந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதகாவும் பரமேஸ் தெரிவித்துள்ளார்.

விதிமுறைகள் மீறல்

  இதுபோன்று, போலீஸ் துறையில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் பயன்படுத்தும் வாகனங்கள் காப்பீட்டு காலம் முடிவடைந்த பின்பும் ஓட்டி வருவதாக தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் பரமேஸ் தெரிவித்துள்ளார்.

  இதுபற்றி பரமேஸ் கூறுகையில், "தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் போலீஸ் துறையில் பயன்படுததும் வாகனங்கள் பற்றிய தகவல்களை சேகரித்தேன். சட்டத்தை மக்களுக்கு கற்றுக் கொடுக்கும் போலீசாரே, போக்குவரத்து விதிமுறைகளை மீறி தாங்கள் பயன்படுத்தும் வாகனங்களின் காப்பீட்டு காலம் முடிவடைந்த பின்பும் ஓட்டி வருகிறார்கள். அந்த வாகனங்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மேலும் செய்திகள்