சாய்ந்த நிலையில் மின்கம்பம்
அந்தியூரில் இருந்து பர்கூர் செல்லும் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் மிகவும் சாய்ந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. மேலும் அதன் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்கிக்கொண்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கம்பிகளில் பட்டு உராய்வு ஏற்பட்டால் விபத்து நிகழ வாய்ப்பு உள்ளது. உடனே பொதுமக்கள் நலன் கருதி மின்கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழரசன், அந்தியூர்.
குண்டும், குழியுமான வீதி
பவானி தாலுகா ஆண்டிக்குளம் ஊராட்சிக்கு உள்பட்டது பழைய காடையம்பட்டி. அங்கு அந்தியூர் மெயின் ரோட்டை இணைக்கும் முக்கிய சாலையாக பிள்ளையார் கோவில் வீதி உள்ளது. இந்த வீதியில் உள்ள கற்கள் பெயர்ந்து உள்ளதுடன், குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வீதியில் நடந்து செல்வோரும், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்வோர் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே குண்டும், குழியுமான வீதியில் புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்.
பொதுமக்கள், பழைய காடையம்பட்டி.
தூர்வாராத சாக்கடை
ஈரோடு அண்ணா தியேட்டர் அருகில் உள்ள சாக்கடை கால்வாய் பல மாதங்களாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியாகி டெங்கு, மலேரியா போன்ற நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயை விரைந்து தூர்வார மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஈரோடு.
விழும் நிலையில் மரம்
கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையம் சாலை ஓரம் ஒரு பெரிய மரம் பட்டுப்போய் காணப்படுகிறது. லேசாக காற்று அடித்தால் கூட மரம் விழுந்துவிடும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ரோட்டில் செல்பவர்கள் யார் மீதாவது மரம் விழுவதற்குள் அதை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்.
பொதுமக்கள், செந்தாம்பாளையம்.
வேகத்தடை அமைக்கப்படுமா?
பவானியில் உள்ள குருநாத கவுண்டர் வீதியில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வீதியில் வாகன ஓட்டிகள் மிகவும் வேகமாக சென்று வருகின்றனர். இதனால் அந்த வீதியில் வசிப்போர் பல நேரங்களில் ரோட்டை கடக்க முடியாமல் தவித்து வருகிறார்கள். எனவே விபத்துக்கள் ஏற்படும் முன் இந்த வீதியில் 2 இடங்களில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
பொதுமக்கள், பவானி.
பாராட்டு (படம்)
ஈரோடு மாணிக்கம்பாளையம் அரசு பள்ளிக்கூடம் விளையாட்டு மைதானத்துக்கு எதிர்புறம் உள்ள தெருவில் பலர் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசியதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டது. இதுபற்றிய செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் புகார் பெட்டி பகுதியில் பிரசுரமாகி இருந்தது. இதைத்தொடர்ந்து தெருவில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு, அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டது. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.
பொதுமக்கள், மாணிக்கம்பாளையம்