மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-06 20:30 GMT
தஞ்சாவூர்:
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரி உரிமை மீட்புக்குழு ஆர்ப்பாட்டம்
காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தலைமை தாங்கினார். 
பொருளாளர் மணிமொழியன், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர்கள் சேரன், ஜெகதீசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் டாக்டர் பாரதி செல்வன், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் சுந்தரவிமல்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்ட முடிவில் ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் தடுப்பணை கட்ட முயற்சிக்கிறது. இதனை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். கர்நாடக முதல்-மந்திரி கடந்த மாதம் 22-ந்தேதி மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கு இதுவரை தமிழக முதல்-அமைச்சர் கண்டனம் தெரிவிக்கவில்லை. 
எனவே அணை கட்டிய பிறகு எதிர்ப்பு தெரிவிப்பதை விட, அணை கட்ட முயற்சிக்கும்போது தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
ரத்து செய்யவேண்டும்
காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும், கர்நாடக அரசு மேகதாது அணை தொடர்பாக அனுமதி பொருள் வைப்பதை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். கடந்த காலங்களில் பாரபட்சமாக செயல்பட்டு வந்த தற்போதைய காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை மத்திய அரசு மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் காவிரி காப்பு நாள் என அறிவித்து காவிரி உரிமையை பெற தமிழகம் முழுவதும் எழுச்சி போராட்டத்தை தமிழக அரசே நடத்த வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள, நெல் கொள்முதலுக்கான ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வேண்டும். கடந்த இரு மாதங்களுக்கு முன் பெய்த தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.இவ்வாறு அவர் கூறினார்.
 கோஷங்கள் எழுப்பினர்
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் நல்லதுரை, தமிழ் தேசிய பேரியக்க தஞ்சை மாவட்ட செயலாளர் வைகறை, தலைமை செயற்குழு உறுப்பினர் ராசேந்திரன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ், வணிகர் சங்க பேரவை துணைத்தலைவர் வாசுதேவன், காவிரி உரிமை மீட்புக்குழு ரமேஷ், தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை, ஆலக்குடி அசோகன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்