அனுமதியின்றி விளையாட்டு போட்டி; 150 பேர் கைது
திருவேங்கடம் அருகே அனுமதியின்றி விளையாட்டு போட்டி நடத்தியதாக 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவேங்கடம்:
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே குறிஞ்சாக்குளம் பகுதியில் ஒரு பிரிவினர் அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் புத்தாண்டு தினத்தன்று விளையாட்டு போட்டிகள் நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு அங்கு விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டதாகவும், அதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் கடந்த 1-ந் தேதி திருவேங்கடம் தாசில்தார் அலுவலகத்தில் 200-க்கும் மேற்பட்டோர் ரேஷன் கார்டுகள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து சங்கரன்கோவில் உதவி கலெக்டர் ஹஸ்ரத் பேகம் தலைமையில் கடந்த 2-ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதன்பின்னர் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இந்தநிலையில் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து ஈடுபட முயன்றனர். மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளை நடத்தினர்.
அவர்களிடம் தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து அனுமதியின்றி விளையாட்டு போட்டி நடத்தியதாக பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் திருவேங்கடத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அந்த பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் குறிஞ்சாக்குளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.