மதுரையில் 12-ந்தேதி மோடி பங்கேற்க இருந்த பொங்கல் விழா தள்ளிவைப்பு

கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிரித்து வரும் நிலையில் மதுரையில் 12-ந்தேதி நடைபெற இருந்த மோடி பொங்கல் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

Update: 2022-01-06 19:56 GMT
மதுரை, 
கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகரிரித்து வரும் நிலையில் மதுரையில் 12-ந்தேதி நடைபெற இருந்த மோடி பொங்கல் விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கண்டன ஊர்வலம்
பஞ்சாபில் பிரதமர் மோடிக்கான பாதுகாப்பு குளறுபடியை கண்டித்தும், அந்த மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசை கண்டித்தும் மதுரையில் பா.ஜ.க. சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஊர்வலம் நடந்தது. 
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சி நிர்வாகிகள் இந்த ஊர்வலத்தில் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி திறப்பு விழா நிகழ்ச்சியில் மோடி கலந்து கொள்வதற்காக வருகிற 12-ந்தேதி தமிழகம் வருவதாக மாநில அரசு அறிவித்திருந்தது. அதே சமயத்தில் பா.ஜ.க. சார்பில் மதுரையில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது குறித்து பிரதமர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்திருந்தோம். ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பு காரணமாக தற்போது மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
தள்ளிவைப்பு
கொரோனா, ஒமைக்ரான் பரவல் அதிகமாவதால், பிரதமர் கலந்து கொள்வதாக இருந்த 'நம்ம ஊர் பொங்கல்' நிகழ்ச்சி மாநில அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளோம்.
அதன்படி, மதுரையில் மோடி கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. மதுரை நகரில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் வகையில் மற்றுமொரு நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும். மாநில அரசின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்திருக்கிறோம். 
இது மதுரை மக்களுக்கு மிகப்பெரிய இழப்பு தான். இது தமிழக பா.ஜ.க. தலைவர்கள் பேசி எடுத்து கொண்ட முடிவு. பிரதமரை அழைத்து வரும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காக எடுத்த முடிவு.
மாநில அரசு தான் முடிவு செய்யும்
விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சி மாநில அரசின் நிகழ்ச்சி. அதற்கும் கட்சிக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. அந்த நிகழ்ச்சி குறித்து மாநில அரசு முடிவு செய்யும். நாங்கள் நடத்துவதாக இருந்த கட்சி நிகழ்ச்சி மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் கனவு, இந்தியாவை 100 சதவீதம் கொரோனா இல்லாத நாடாக வேகமாக மாற்ற வேண்டும் என்பது. 
அதன் காரணமாக மாநில அரசு விதித்துள்ள கட்டுபாடுகளை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். எங்களால் மத்திய அரசுக்கு எந்தவித கெட்டபெயரும் வந்து விடக்கூடாது என்பதற்காக கட்சி நிகழ்ச்சிகளை தள்ளி வைத்திருக்கிறோம்.
ஜல்லிக்கட்டு என்பது வீரத்தின் வெளிப்பாடு. ஜல்லிக்கட்டு எந்த காரணத்திற்காகவும் தள்ளி போகக்கூடாது. கண்டிப்பாக நடக்க வேண்டும். ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்துவதற்கு ேமாடி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். மாநில அரசு ஜல்லிக்கட்டை, கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நடத்தும் என நம்புகிறோம்.
மாநில அரசின் அலட்சியம்
பிரதமர் மோடி, நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலத்தில் பல ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக சென்றிருந்தார். அவர் செல்ல இருந்த சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டார். 80 கிலோ மீட்டர் தூரம் சென்ற பின்னர் அவர் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார். 
இந்த சம்பவம் நடந்த இடம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதற்கு மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம். பிரதமரின் பாதுகாப்பை அந்த மாநில அரசு கேள்விகுறியாக்கி இருக்கிறது.
கவர்னரை சந்திப்போம்
இதனை கண்டித்து பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு பல்வேறு போராட்டங்களை பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. மனித சங்கிலி, பேரணி, ஊர்வலம், மெழுகுவர்த்தி ஏந்தி அறபோராட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். மாநில அரசு தனது கடமையை செய்யாமல் பிரதமரின் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியது தொடர்பாக கவர்னரையும் சந்திக்க இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஊர்வலம் தல்லாகுளம் அவுட் போஸ்ட் பகுதியில் இருந்து தமுக்கம் மைதானம் தமிழன்னை சிலை வரை சென்றது. இதில் பொதுச்செயலாளர் சீனிவாசன், மாநகர் தலைவர் டாக்டர் சரவணன், புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்