ராஜேந்திர பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை
விருதுநகரில் ராஜேந்திர பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விருதுநகர்,
விருதுநகரில் ராஜேந்திர பாலாஜியிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை
பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று முன்தினம் நள்ளிரவு 1.15 மணி அளவில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
இதையடுத்து மதுரை சரக டி.ஐ.ஜி. காமினி, விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர், ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தினர். நேற்று அதிகாலை 4:30 மணி வரை சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நீடித்தது. இதனைத்தொடர்ந்து அவர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.
கைது
ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட தகவலறிந்து முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தலைமையில் மாவட்ட கவுன்சிலரும், வடக்கு ஒன்றிய செயலாளருமான மச்சராஜா உள்பட அ.தி.மு.க.வினர் குற்றப்பிரிவு அலுவலகம் முன்பு திரண்டனர். போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி வற்புறுத்தியும் அவர்கள் செல்ல மறுக்கவே அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சூலக்கரை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் திரண்ட முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகன், மாவட்ட கவுன்சிலர் கணேசன், மாணவரணி பெருமாள் பிச்சை, ஆணழகன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்துள்ள மனு மீதான உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.