கொரோனா, ஒமைக்ரான் பரவலை தடுக்க ஊராட்சி அளவில் குழு அமைத்து பொதுமக்களை கண்காணிக்க வேண்டும். கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவலை தடுக்க ஊராட்சி அளவில் குழு அமைத்து பொதுமக்களை கண்காணிக்க உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
ஜோலார்பேட்டை
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா, ஒமைக்ரான் பரவலை தடுக்க ஊராட்சி அளவில் குழு அமைத்து பொதுமக்களை கண்காணிக்க உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட தாமலேரி முத்தூர் சாலை நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் உள்ளாட்சி பிரதிநிதிகள் அளிக்கவேண்டிய பங்களிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட சுகாதாரபணிகள் துணை இயக்குனர் செந்தில், சப்- கலெக்டர் (பொறுப்பு) பானு, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகுமார், ஒன்றியக் குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் அமர் குஷ்வாஹா பேசியதாவது:-
ஊராட்சி அளவில் குழு
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊராட்சி அளவில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், கிராம சுகாதார செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள், வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழு பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழுவை உருவாக்கி அதன் மூலம் ஒவ்வொரு வார்டு வாரியாக வெளியில் செல்பவர்கள், வெளியூரிலிருந்து வருபவர்கள், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டவர்கள் ஆகியோரை கண்காணித்து அவர்களை பரிசோதனை செய்ய வேண்டும்.
பரிசோதனையின் முடிவில் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதுபோன்று மாவட்டம் முழுவதும் கடைபிடிக்கும் போது மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பை நிச்சயமாக கட்டுக்குள் கொண்டுவர முடியும். இதனை உள்ளாட்சி பிரதிநிதிகள் குழு உருவாக்கி அதனை செயல்படுத்த வேண்டும்.
ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட அளவிலான துறை அதிகாரிகள், ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.