வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 44 வீடு, கடைகள் இடித்து அகற்றம் போலீசார் குவிப்பு; பரபரப்பு

வெண்ணந்தூர் அருகே வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 44 வீடு, கடைகள் இடித்து அகற்றப்பட்டன. போலீசார் குவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-06 18:26 GMT
வெண்ணந்தூர்:
வெண்ணந்தூர் அருகே வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 44 வீடு, கடைகள் இடித்து அகற்றப்பட்டன. போலீசார் குவிப்பால் பரபரப்பு ஏற்பட்டது.
போக்குவரத்து நிறைந்த பகுதி
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அடுத்த வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் அரசு ஆண்கள், பெண்கள் மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளிகள், கால்நடை ஆஸ்பத்திரி, வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளன. இதனால் தினமும் காலை முதல் மாலை வரை இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்ததாகவும், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் இருந்து வருகிறது.
 இந்த நிலையில் அலவாய்ப்பட்டி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பட்டீஸ்வரன் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து ராசிபுரம் செல்லும் சாலை, தொட்டிப்பட்டி வையப்பமலை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து வழக்ைக விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
இறுதி நோட்டீஸ்
இதையடுத்து வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள் மற்றும் கடைகளை காலி செய்யக்கோரி இறுதி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில் குறிப்பிட்ட நாட்களுக்குள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடை, வீடுகளை அகற்றி கொள்ள வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் அரசு அதிகாரிகள் மூலம் இடித்து அகற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் 4 நாட்களுக்கு தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவில்லை என்று ெதரிகிறது.
இந்த நிலையில் நேற்று காலை ராசிபுரம் தாசில்தார் கார்த்திகேயன், உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதிக்கு பொக்லைன் எந்திரங்களுடன் வந்தனர். மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்க ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், வெண்ணந்தூர் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 
பரபரப்பு
இதையடுத்து ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 44 வீடு மற்றும் கடைகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதில் சிலர் அதிகாரிகள் வந்த பிறகு அவசரகதியில் கடை மற்றும் வீடுகளில் இருந்த பொருட்களை எடுத்து காலி செய்ததை பார்க்க முடிந்தது. இந்த சம்பவத்தால் நேற்று வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்