பாப்பாரப்பட்டி பகுதியில் வெல்ல ஆலைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்-அதிகாரிகள் நடவடிக்கை
பாப்பாரப்பட்டி பகுதியில் வெல்ல ஆலைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி, கடகத்தூர், வேலம்பட்டி, பனந்தோப்பு உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் செயல்படுகின்றன. இதில் பொங்கல் பண்டிகைக்காக மும்முரமாக வெல்லம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு சர்க்கரை, மைதா, ரசாயன பொருட்கள் மற்றும் செயற்கை நிறமேற்றிகள் கலக்கப்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.
இதில் பாப்பாரப்பட்டி பகுதியில் செயல்பட்ட ஒரு ஆலையில் தடை செய்யப்பட்ட ஹைட்ரோஸ் எனப்படும் வேதிப்பொருள், சர்க்கரை மற்றும் செயற்கை நிறமேற்றிகள் கலக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அந்த ஆலைக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் வெல்லம் இருப்பு வைக்கும் அறையையும் வேலை செய்யும் பணியாளர்களிடமும் சுகாதாரத்தை பேண வேண்டும் என்று அறிவுறுத்தினர். ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், கந்தசாமி, குமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.