நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
கடலூர்,
கடலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேருராட்சிகளுக்கான சாதாரண நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி முறையில் பிரித்து முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி நடந்தது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்ட ருமான பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி ஒதுக்கீடு செய்தார் அதன்படி கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளில் உள்ள 152 வாக்குச்சாவடி மையங்களுக்கும் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிக்குட்பட்ட 180 வார்டுகளில் உள்ள 314 வாக்குச்சாவடி மையங்களுக்கும் மற்றும் அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கைகொண்டான், பெண்ணாடம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளில் 722 வார்டுகளுக்கு 260 வாக்குச்சாவடி மையங்களுக்கும் ஆக மொத்தம் 447 வார்டுகளுக்கு 726 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு 20 சதவீதம் இருப்புடன் சேர்த்து முதற்கட்டமாக 878 வாக்குப்பதிவு எந்திரங்கள் 878 வாக்குச்செலுத்தும் கருவிகள் என கணக்கிட்டு கணினி முறையில் பிரித்து ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மல்லிகா, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.