கொரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம்- கலெக்டர்

கொரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-01-06 16:18 GMT
கொரடாச்சேரி:-

கொரோனா விதிமுறைகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வழிகாட்டு நெறிமுறைகள்

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய்த் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டுள்ளது. 
அதன்படி விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். நோய்த்தொற்று ஏற்பட்டு வீட்டு தனிமைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் வீட்டினுள் தனிமைப்படுத்தி கொள்ளாமல் விதி மீறினால் அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். 

அபராதம்

முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் உமிழ்பவர்களுக்கு ரூ.500, சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.500, சலூன், அழகுநிலையம், உடற்பயிற்சி கூடம் மற்றும் வணிகவளாகம், திரையரங்குகள் போன்ற பொது இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் தனிநபர் விதிமீறல்கள் செய்தால் ரூ.500, வணிகநிறுவனங்கள் செயல்படுதல் மற்றும் வாகனங்கள் இயக்குதல் போன்ற விதிமீறல்கள் இருப்பின் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 

உடல் வெப்பநிலை

மேலும், அனைத்து வணிக நிறுவனங்களின் நுழைவுவாயிலின் முன்பு கை கழுவுவதற்கு ஏதுவாக சோப்புடன் கூடிய கை கழுவும் இடம் அல்லது சானிடைசர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். மேலும் உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். 
பொதுமக்கள் இடைவெளி விட்டு நிற்பதற்கு வட்டம் வரைந்திருக்க வேண்டும். வணிக கடைகள் மற்றும் உணவகங்களில் பணிபுரியும் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். எனவே, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொற்று மற்றும் உருமாறிய கொரோனா ஒமைக்ரான் வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுக்க அரசின் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். 
இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்